Gallery Section

 

நிகழ்ச்சி விவரங்கள்:


          

மது இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், இலக்கியச் சொற்பொழிவாளருமான குமரி அனந்தன் கூறினார்.

திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற 13-ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி வரவேற்றார். தாளாளர் முஸ்தபா தலைமை வகித்தார்.

போட்டிகளில் வெற்றிபெற்ற பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி குமரி அனந்தன் பேசியதாவது: இப்பள்ளியில் தமிழ்த் தாத்தா உ.வே.சா. பெயரில் 13-வது ஆண்டாக இலக்கிய மன்ற விழாவை நடத்துவது பாராட்டுக்குரியது. நான் பாரீஸ் நாட்டுக்குச் சென்றபோது, அங்கு இருந்த மோனோலிசா படத்துக்குக் கீழே எழுதி இருந்த வாசகங்களை என்னால் படிக்க முடியவில்லை. எனவே, உலகப் பொது மொழியை கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் சபைக்கு கடிதம் அனுப்பினேன். அனைத்து நாடுகளும் தாய் மொழியையும், உலகப் பொது மொழியையும் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தி இருந்தேன்.

அதற்கு ஐ.நா. சபை அனுப்பிய பதில் கடிதத்தில், இந்த கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி, ஐ.நா. சபைக்கு அனுப்பிவைத்தால், கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக, 1992-ல் பிரதமருக்கு கடிதம் எழுதினேன். இன்று வரை பதில் வரவில்லை.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் நேரு தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப் பட்டது. அப்போது, நேரு, ராஜாஜி உள்ளிட்டோர், மகாத்மா காந்தியிடம் ஆசிர்வாதம் பெறச் சென்றனர். மவுன விரதத்தில் இருந்த காந்தி, ஒரு வெள்ளைத் தாளில் ‘தீண்டாமையை ஒழித்து, மது இல்லாத இந்தியாவை உருவாக்கினால் என்னுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு’ என்று எழுதிக் கொடுத்தார். ஆனால், காந்தியின் ஆசிர்வாதம் யாருக்கும் கிடைக்கவில்லை. இனியாவது மது இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இப்பள்ளியில் நேற்று நடை பெற்ற பள்ளியின் 21-ம் ஆண்டு விழாவில், கலைநிகழ்ச்சிகள், பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடை பெற்றன.